கொரோனா: நேரடி சூழ்நிலை பகுப்பாய்வு

நாட்டில் நேற்றைய தினத்தில் மட்டும் 473 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

Total Views : 214
Zoom In Zoom Out Read Later Print

நாட்டில் நேற்றைய தினத்தில் மட்டும் 473 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

இலங்கையில் நேற்றைய தினத்தில் 473 பேருக்கு கொவிட்19 தொற்றுதியானது.

பேலியகொடை மீன் சந்தை கொத்தணியுடன் தொடர்புடைய 472 பேருக்கும், வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய கடலோடி ஒருவருக்கும், நேற்று கொவிட் 19 தொற்று கண்டறியப்பட்டது.

இதனையடுத்து நாட்டில் கொவிட்19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 22,501 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது .

இதற்கமைய மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் பேலியகொடை மீன் சந்தை ஆகிய இரட்டைக் கொத்தணிகளுடன் தொடர்புடைய நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 18,963 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் 410 கொவிட்19 நோயாளர்கள் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

நாட்டில் இதுவரை இந்த தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,226 ஆக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் 6,168 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் மருத்துவபீட ஆய்வுகூடங்களில் நேற்று 400 பேரின் பீ.சி.ஆர் மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 15 பேருக்கு கொவிட்19 தொற்றுறுதியாகியுள்ளது.

அவர்களில் இரண்டு பேர் வட மாகாணத்தையும் ஏனையோர் வெளிமாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

கடந்த 21ஆம் திகதி கொழும்பில் இருந்து வீடு திரும்பிய நிலையில் 25 ஆம் திகதி முதல் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த காரைநகர் சேர்ந்த ஒருவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்

இதேநேரம், கிளிநொச்சியில் நீர் விற்பனை நிலையத்திற்கு பாரவூர்தி மூலம் நீரைக் கொண்டு சென்ற சாரதி ஒருவர் தனிமைப்படுத்தலில் இருந்த நிலையில் நேற்று அவருக்கு கொவிட்19 தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுதவிர, முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த 8 பேருக்கும் பெரியகட்டு வவுனியா தனிமைப்படுத்தல் முகாமைச் சேர்ந்த 5 பேருக்கும் கொவிட்19 தொற்றுறுதியானதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இதேவேளை, கொவிட் நோயினால் மரணிக்கின்றவர்களை தகனம் செய்வதற்கு, அரச வைத்தியசாலைகளில் எந்தவிதமான கட்டணமும் அறவிடப்படமாட்டாது என்று, சுகாதார மேம்பாட்டு பணிமனையின் பணிப்பாளர் விசேட வைத்தியர் பாலித்த கருணாப்ரேம தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணிமனையில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறினார்.

எவ்வாறாயினும், கொவிட்19 நோயினால் மரணிக்கின்றவர்களது இறுதிக்கிரிகைக்கான சவப்பேழை கொள்வனவு போன்ற செலவினங்களுக்கு, அவர்களது உறவினர்களே நிதி வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஒருவருக்கு, அதுசம்மந்தமான எந்தவிதமான அறிகுறிகளும் தென்படாதவிடத்து, அவர் இயல்பாகவே குணமடைந்துவிடக்கூடும் என்று, விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு வைரஸ் தொற்றுக்கு எதிராகவும் உடலில் எதிர்ப்பு சக்தி உருவாகும்.

எனினும் அதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்று சொல்ல முடியாது.

ஆனால் வைரஸ் தொற்றுக்குள்ளாகி இருந்தும், அது எந்தவிதமான அறிகுறிகளையும் வெளிப்படுத்தவில்லை என்றால், உடலில் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டிருக்கிறது என்றே பொருள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வெலிக்கடை சிறைச்சாலையில் தடுப்பில் இருந்த குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில், தற்போது அவர் ஐ.டி.எச். மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நாட்பட்ட நோய் அறிகுறிகள் காரணமாக, அவரை மருத்துவ கண்காணிப்பில் வைத்திருக்கும் பொருட்டு அங்கு மாற்றப்பட்டிருப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.தொடர்புடைய செய்திகள்.


காணொளி